×

டி.கே.ராஜேந்திரன் விடுவிப்பு: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா பதவி ஏற்பு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு

சென்னை: தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லா நேற்று பதவி ஏற்றார். அப்போது, பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவித்தார்.  தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மற்றும் மண்டல ஐஜிக்கள் வரதராஜூ, நாகராஜ், பெரியய்யா உள்ளிட்ட 10 போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது.  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற புகாரின் அடிப்படையில் மாற்றப்பட்டவர். அதேபோல உளவுத்துறை ஐஜியாக உள்ள சத்தியமூர்த்தியும் மாற்றப்பட்டவர்.இதனால் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பணியில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டார். புதிய தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார். கடந்த முறை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டவுடன், புதிய போலீஸ் கமிஷனராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அசுதோஷ் சுக்லா மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தேர்தல் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனுக்கு பதில் அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மையான அதிகாரியான அசுதோஷ் சுக்லா, நேற்று காலை தமிழக டிஜிபி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்சியின் போது, சிறப்பு டிஜிபி விஜயகுமார், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஐஜி சேஷசாயி, உளவுத்துறை ஐஜிக்கள் சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, பணியமைப்பு ஐஜி ஜெயராம், காவல்துறை நிர்வாக ஐஜி கந்தசாமி, தேர்தல் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.தமிழகம் முழுவதும் உள்ள சட்டம் ஒழுங்கு எஸ்பிக்கள் இனிமேல், தேர்தல் பணி தொடர்பாக அசுதோஷ் சுக்லாவிடம் மட்டுமே ஆலோசனை பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் டிஜிபி அசுதோஷ் சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது:  ‘நான் தேர்தல் டிஜிபியாக பதவி ஏற்று இருக்கிறேன். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஏற்கனவே, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அந்த அனுபவம் இருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் கண்டறியப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்’. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DG Rajendran ,release ,Ashutosh Shukla ,DGP , TK Rajendran, Election DGP Ashutosh Shukla, civilians
× RELATED அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் லாக்டவுன் பர்ஸ்ட் லுக் வெளியீடு